ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

மழையும் - உன் நினைவும் ...



இரவின் மீது மெல்லிய தூறலாய்
மழை பெய்து கொண்டிருக்கிறது.

காற்றும் மழையும்
காதலாகி கசிந்துருகிக் கொண்டிருக்கிற இந்த நிசியில்
ஊளையிடுகிற தெருநாயின் குரலாய்
அகலத்தின் அகண்டவெளியில் ஒலிக்கிறதென் குரல்.

காலமே அறியும்!
என் மனக்குளத்தில் நீயெறிந்த சொற்கள் ஏற்படுத்திய
அலைகளின் சலனத்தை.

குளிருக்கு பயந்தோ கொசுவுக்குப் பயந்தோ
எல்லோரும் இழுத்து மூடி உறங்கிக் கொண்டிருக்க...
நான் பிரியத்தைச் சொல்ல வலுவற்ற வார்த்தைகளில்
உன் நினைவுகளோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன்.

கரையோரச் செடிகளை தொட்டிழுத்து
சலசலத்துப் போகிற
ஓடைநீரின் குதூகுலமாய் கழிந்த
சில ரம்மியமான பொழுதுகளின்
தடங்களை மட்டும் விட்டுவிட்டு
மெல்ல நகர்ந்துவிட்டது காலம்.

சுவரஸ்யமாய் வாசித்துக் கொண்டிருக்கிற
நாவலின் ஒருபாதியை யாரோ
கிழித்தெடுத்துப் போய்விட்டது போலிருக்கிறது
நீ எனக்கில்லை என்றான பின் இந்த வாழ்க்கை.

பாரம் இழுத்தோய்ந்து
கண்கிறங்க ஆகாரத்தின் மிச்சங்களை
அசை போடுகிற மாடும்
இந்த நடுநசியில் காதலின் ஞாபகங்களை
அசை போடுகிற நானும்
ஒன்றா தெரியவில்லை

சாளரத்தின் கதவுகளை தள்ளிக் கொண்டு நுழைகிற
குளிர்ந்த காற்றின் இதமான தழுவலாய் இருந்தது
இன்றைக்கும் புரிபடாத காதலின் ரகசியத்தை 
நாம் கண்களால் பேசிக் கொண்டிருந்த பொழுதுகள். 

என் இருண்டவானில்
சிறகசைத்து போனதொரு வெள்ளைப் பறவை நீ.

நம்மிடையே வார்த்தைகள் உலர்ந்து
மெளனம் படர்ந்திருக்கிற
இக்காலத்தின் எதிர்பாரா சந்தர்பங்களில்
நாம் சந்தித்துக் கொள்ள நேர்கிற பொழுதில்
என்ன நினைத்துக் கொள்வாய்
என்பதான யோசனைகளால்
கழிந்து கொண்டிருக்கிறது காலம்.

உன் உதட்டுச் சுழிப்பில்
கண்களின் வசீகரத்தில் 
உறைந்திருக்கிற என் மொழியால்
உணர்த்த முடியாத
குருதி கசியும் நம் பிரிவின் துயரை 
சுரம் பிரித்து பாடிக் கொண்டிருக்கிறது மழை. 

மழையின் சங்கீதங்கள் எப்போதும் எனக்கு
உனைப் பற்றியதாகவே இருக்கிறது.

மழை நிற்பதற்கான அறிகுறிகள் இல்லை.

மழை கிளர்ந்த உன் நினைவுகளுடன்....

-விவேகா








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக